செவ்வாய், 4 டிசம்பர், 2012

கேரி பேக்கு’களும் அணுகுண்டுகளும் !!!


 

இன்றைய தலைமுறையினரது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பிளாஸ்டிக் ‘கேரிபேக்’ மாறிவிட்டது, இப்படி பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை நாம் முறையாக அப்புறப் படுத்துகிறோமா? இல்லை. மாறாக, பூமிக்கு கேடுவிளைவிக்கும் வகையில் தெருவில் வீசுகிறோம், பாலிதீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும்போது, பைகளில் உள்ள சாயத்தால் காற்றுமண்டலம் மாசுபடுகிறது, பல்வேறு சுவாச நோய்களை தோற்றுவிக்கிறது.

பொதுவாக 18 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் மறுசுழற்சி செய்யமுடியாது. இதனால் இவை நீர்நிலைகள், நிலத்தடி நீர், மண் படிவ நீரை தடுத்து, நீர் ஆதார வழிகளின் ‘நெட்வொர்க்கையும்’ பாதிக்கிறது, இந்த வகையில் ‘கேரிபேக்’ எனும் பாலிதீன் பைகளும் ‘யூஸ் அண்ட் த்ரோ’ பிளாஸ்டிக் கப்புகளும் இயற்கையை அழிப்பதில் முன்னணியில் உள்ளன. ஒரு ‘கேரிபேக்’ மண்ணோடு மண்ணாகி அழிய 400 ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானம் சொல்கிறது. மேலும் மண்ணில் புதைவதால் மரங்களுக்கு நீர் எடுத்துச் செல்லும் வேர்களை பாதிக்கிறது. தண்ணீரில் மிதக்கும் பாலிதீன் பைகளால் குப்பைகள் பெருகுவதோடு, விலங்குகளுக்கும் தொற்றுநோய் ஏற்படுகிறது.

ஹோட்டல்களில் ‘கேரிபேக்’கில் சுடச்சுட உணவுகளை பார்சல் செய்து கொடுக்கின்றனர். சாம்பார் போன்றவைகளையும் சிறிய பாலிதீன் பைகளில் கட்டிக் கொடுக்கின்றனர். சூடாக இருந்தால், பாலிதீன் பை இளகி, அதில் உள்ள ரசாயனம் உணவுப்பொருட்களுடன் கலக்கிறது. அதை உண்பவர்களுக்கு குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும்போது, குழந்தைகளையும் பாதிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு பாலிதீன் பைகள் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுகின்றன. அவைகள் மண்ணில் மக்காமல் அப்படியே இருப்பதால் பூமியின் தன்மையே மாறுபடுகிறது. மழை நீரை உறிஞ்சும் சக்தியை மண் இழக்கிறது. இன்னும் ஒரு முக்கியப் பிரச்சனை, எத்தனை மாடுகள் பாலிதீன் பைகளை தின்று தீர்க்கின்றன தெரியுமா? சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாட்டின் வயிற்றை அறுவை சிகிச்சை செய்து அதில் இருந்து 40 கிலோ பாலிதீன் பைகள் எடுத்து வெளியில் கொட்டப்பட்டன.


கடைக்கோ அல்லது வெளியில் எங்கும் செல்லும்போது நிச்சயமாக ஒரு கைப்பையை எடுத்துச் செல்லுங்கள். எந்தப் பொருள் வாங்கினாலும் பாலிதீன் பையில் வாங்குவதைத் தவிர்ப்போம் 

மலைபோலக் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள், அணுகுண்டை விட ஆபத்தானது. அடுத்த தலைமுறையினருக்கு பேராபத்து.

 துணிப்பைகள், சணல் பைகள், பழைய துணிகளால் தைக்கப்பட்ட பைகள், விழாக்களில் கொடுக்கப்படும் மஞ்சள் பைகளை பயன்படுத்துவோம். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்போம். பாலித்தீன் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக